/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
/
ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : பிப் 15, 2024 05:31 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தங்களது குடும்பத்தினர் பிறந்தநாள் விழா கொண்டாடியதை ராணுவத்தில் எல்லை பகுதியில் ராணுவத்தில் பணியாற்றும் சகோதரர்கள் வீடியோ கால் மூலம் பார்த்து ரசித்தனர்.
மானாமதுரை அருகே உள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிஆண்டவர் 60, இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். ராணுவத்தில் பணியாற்றும் இவரது மகன்கள் 5க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். வருடங்களுக்கு முன் உம்பளச்சேரியிலிருந்து கன்று வாங்கி வந்து அதற்கு கரிகாலன் என பெயர் சூட்டி வளர்த்து ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் , சக்குடி உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பிடிபடாமல் கரிகாலன் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று 5வது பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளை கரிகாலனை குளிப்பாட்டி, புது வேஷ்டி, துண்டு அணிவித்து வீட்டு ஹாலில் நிற்க வைத்து 4 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி குடும்பத்தினர் , உறவினர்கள் கொண்டாடினர். எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இவரது மகன்கள் வீடியோ கால் மூலம் பிறந்த நாள் விழாவை கண்டு ரசித்தனர்.

