ADDED : அக் 19, 2024 05:24 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரான்மலையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகின்றனர்.
மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான இங்கு 2 ஆயிரம் ஆண்டு பழமையான மங்கைபாகர் தேனம்மை கோயில் உள்ளது.
மலை உச்சியில் விநாயகர், முருகன் கோயில்களும் தர்காவும் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் நிலையில் பஸ் ஸ்டாண்ட் இல்லை.
இவ்வழியாக பல்வேறு ஊர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகள் அனைத்தும் பிரான்மலை ரத வீதியில் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. வெயில், மழை காலங்களில் ஒதுங்க இடமில்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். இங்கு ஊராட்சி அலுவலகம் அருகில் பஸ் ஸ்டாண்ட் கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளவில்லை. எனவே இங்கு விரைவில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

