/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
/
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
ADDED : டிச 26, 2024 04:54 AM

சிவகங்கை: தமிழக ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை துவம்சம் செய்ய, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு காளைகள் கருப்பு, கொம்பன், மூக்கன் என பல்வேறு பெயர்களில் தயாராகி வருகின்றன.
காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், அவனியாபுரம், திருச்சி, மணப்பாறை, சிவகங்கையில் சிராவயல், கண்டுப்பட்டி உட்பட பல்வேறு இடங்களில்தை பொங்கலை முன்னிட்டு ஜன.,யில் இருந்து மே வரை அரசின் அனுமதி (மாவட்ட நிர்வாகம்) பெற்று ஜல்லிக்கட்டு, வட மஞ்சுவிரட்டு, விரட்டு மஞ்சுவிரட்டு என பல்வேறு வகைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மே மாதத்திற்கு பின் இப்போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை. இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமான காளைகள் அழைத்து செல்லப்படும்.
விழாக்குழுவினர் ஒவ்வொரு முறையும் காளை வளர்ப்போர், மாடு பிடி வீரருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுப்பார்கள். அந்த வகையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு களத்தை அலங்கரிக்க சிவகங்கை மாவட்டத்தில் 500 முதல் 700 காளைகள் வரை தயாராகி வருகின்றன.
காளைகளுக்கு பிடித்த பருத்தி
சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே ஜன., முதல் மே வரை அரசு அனுமதியுடன் 50 முதல் 60 ஜல்லிக்கட்டு, வட மற்றும் விரட்டு மஞ்சுவிரட்டு நடக்கும். அனுமதியின்றி நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டு களத்தில் துள்ளி விளையாடவும், வீரர்களை விரட்டி அடிக்கவும் தற்போதிருந்து காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக அதிகாலையில் நீச்சல், மண் குத்துதல், ஓட்டப்பயிற்சி அளித்து வருகின்றனர். உடல் திடமாக இருக்க பருத்தி கொட்டையை அரைத்து கொடுக்கின்றனர்.
இது தவிர துவரம், உளுந்து தோலை தண்ணீரில் ஊறவைத்து கொடுக்கின்றனர். களத்தில் மாட்டிற்கு இளைப்பு வராமல் இருக்க தலைசுருளி வேரையும், திடகாத்திரமாக இருக்க குமுட்டி காயை அரைத்து கொடுக்கின்றனர். இதனால், களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களை விரட்டி அடிக்க காளைகள் தயராகி வருகிறது.
காளைகளுக்கு 'ஜி.பி.ஆர்.எஸ்.,' கருவி
முன்பெல்லாம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டிற்கு அழைத்து செல்லும் காளைகள் களத்தில் இருந்து ஓடி காட்டிற்குள் சென்றுவிடும். இவற்றை காளைகளின் உரிமையாளர்கள் தேடி கண்டுபிடிக்க 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும். இதை தவிர்க்க காளைகளின் கழுத்தில் கட்டப்படும் மணியுடன் கூடிய 'பெல்ட்'-ல் 'ஜி.பி.ஆர்.எஸ்.,' கருவியை பொருத்தி விடுவர். அந்த கருவியின் உதவியுடன் காளையின் உரிமையாளர் அலைபேசியில் கூகுள்மேப் மூலம் தேடி கண்டுபிடித்து விடுவார்கள்.
இதற்காக ஒவ்வொரு காளைக்கும் ரூ.5000 மதிப்பிலான ஜி.பி.ஆர்.எஸ்., கருவியை பொருத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நல்ல மழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நெல் விளைச்சல் அதிகரித்து, தை பொங்கலை முன்னிட்டு விவசாயிகளுக்கு அறுவடைக்கு தயாராவார்கள்.
இதற்காக உழைத்த காளைகளுக்கு மரியாதை செய்யவும் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நல்ல விளைச்சல் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, வட மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் களைகட்டும்.