/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூருக்கு வராத பஸ்கள்
/
திருக்கோஷ்டியூருக்கு வராத பஸ்கள்
ADDED : ஜூலை 04, 2025 03:00 AM
திருக்கோஷ்டியூர்: சிவகங்கையிலிருந்து திருக்கோஷ்டியூர் வழியாக செல்லும் பஸ்கள் புறவழிச்சாலை வழியாக செல்வதால் திருக்கோஷ்டியூர் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ஆன்மிகச் சுற்றுலாத்தலமான திருக்கோஷ்டியூர் வழியாக திருப்புத்துார்- சிவகங்கைக்கு அரசு,தனியார் பஸ்கள் இயங்குகின்றன. திருக்கோஷ்டியூருக்கு புறவழிச்சாலை அமையும் முன்பு வரை அனைத்து பஸ்களும் திருக்கோஷ்டியூருக்குள் வந்து சென்றன. புறவழிச்சாலை அமைந்த பின் பஸ்களில் கூட்டம் இருந்தால் திருக்கோஷ்டியூருக்குள் செல்வதில்லை.
குறிப்பாக சிவகங்கையிலிருந்து வரும் அரசு பஸ்கள் காலை 6:00 மணி அளவிலும், இரவில் 10:10 அளவிலும் நகருக்குள் வருவதில்லை. முதலும், கடைசி பஸ்களை நம்பி காத்திருக்கும் பல பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.
மேலும் காலையிலும், மாலையிலும் பள்ளி நேரங்களில் ஊருக்குள் வரும் தனியார் பஸ்கள் மற்ற நேரங்களில் வருவதில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அனைத்து நேரங்களில் பஸ்கள் வந்து செல்ல போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரியுள்ளனர்.