ADDED : ஜன 02, 2025 05:11 AM

சிவகங்கை: காளையார்கோவில் அருகே சிறியூரில் ரோடு புதுப்பிக்காததால், அரசு பஸ் வரத்தின்றி பொதுமக்கள் தவிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காளையார்கோவில் ஒன்றியம், உசிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறியூர் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிறியூர் மட்டுமின்றி தோடுகுளம், முனக்குடை, பளூர் உள்ளிட்ட கிராம மக்கள் பஸ்சில் காளையார்கோவில், சிவகங்கை செல்ல சிறியூருக்கு தான் வர வேண்டும். இதனாலேயே சிவகங்கையில் இருந்து சிறியூருக்கு தினமும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சிறியூர் கிராமத்திற்குள் நுழையும் ரோட்டை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். இந்த ரோடு குண்டும் குழியுமாகவும், மழைகாலத்தில் மழை நீர் தேங்கி பள்ளங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பஸ்களை இயக்க முடியாமல், சிவகங்கை - சிறியூர் பஸ்சை பாதியிலேயே டிரைவர்கள் திருப்பி விடுகின்றனர். இதனால் சிறியூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் சிவகங்கை, காளையார்கோவிலுக்கு சென்றுவர பஸ்களின்றி தவித்து வருகின்றனர்.
சிறியூர் விவசாயி செல்லத்துரை கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக இந்த ரோட்டை புதுப்பித்துதருமாறு கேட்டு வருகிறோம். தரமற்ற ரோட்டால் அரசு பஸ்கள் வருவதில்லை. இதனால் கிராம மக்கள், விவசாயிகள்,மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு பஸ்சில் காளையார்கோவில், சிவகங்கைக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். இந்த ரோட்டை புதுப்பித்து சிறியூர் வரை பஸ்சை இயக்க கோரி கலெக்டர்ஆஷா அஜித்திடம் கிராமத்தினர் புகார் அளித்தோம், என்றார்.