/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல வண்ண இருக்கைகளுடன் ஓட்டை, உடைசலாக ஓடும் பஸ்கள்
/
பல வண்ண இருக்கைகளுடன் ஓட்டை, உடைசலாக ஓடும் பஸ்கள்
ADDED : ஜன 29, 2025 07:32 AM

மானாமதுரை : மதுரை வழியாக இயக்கப்படும் பெரும்பாலான அரசு தொலைதுார பஸ்கள் ஓட்டை , உடைசலாகவும்,இருக்கை மோசமாக உள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரம்,ராமநாதபுரம், பரமக்குடி,முதுகுளத்தூர்,சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான தொலைதுார பஸ்கள் சென்று வருகின்றன. ராமேஸ்வரத்திற்கு தை அமாவாசையை ஒட்டி கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் ஓடும் டவுன் பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் ஓட்டை,உடைசலாக இருப்பதால் ஆங்காங்கே பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது.
பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கம்புணரி மலைப்பகுதியில் அரசு டவுன் பஸ்சில் பிரேக் சரியாக பிடிக்காத காரணத்தினால் கண்டக்டர் பெரிய கல்லை துாக்கி கொண்டு பஸ்சின் பின்புறம் ஓடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக கோவை சென்ற அரசு பஸ்சில் உள்ள இருக்கைகள் மிகவும் மோசமாக பயணிகள் உட்கார்ந்து செல்ல முடியாத நிலையில் இருந்தது.
சீட் கவர் கிழிந்து உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிந்ததால் பயணிகள் உட்கார்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசு பஸ்களின் இருக்கைகளை சீரமைத்து துாய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.