/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை ரத்து
/
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை ரத்து
ADDED : ஏப் 23, 2025 02:51 AM
சிவகங்கை:தமிழகத்தில் மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் நடத்த நிதியின்றி தவிப்பதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் நடத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை மூலம் இரு வழிகளில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக 75 சதவீதத்திற்கும் கீழ், மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இந்த அட்டையுடன் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பித்தால் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதம் ரூ.2,000, வருவாய்த்துறை மூலம் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்படுகிறது.
சில மாதங்களாக தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை விடுவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. வாழ்வாதாரம் நடத்த நிதியின்றி தவிப்பதாக அரசுக்கு, அந்தந்த கலெக்டர் மூலம் புகார் மனுக்களை அவர்கள் அனுப்பி வருகின்றனர். கலெக்டர்களிடம் பல முறை புகார் அளித்தும், மாதாந்திர உதவி தொகையை அரசு விடுவிக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர். மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மாதாந்திர உதவி தொகையை விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசு, மாற்றுத்திறனாளிகளின் ஆதார் எண், போட்டோ, தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ததில், பலர் இரு துறைகளிலும் உதவித்தொகை பெறுவது கண்டறியப்பட்டது. வருவாய்த்துறை மூலம் பெறப்படும் உதவித்தொகை சிலருக்கு ரத்து செய்யப்பட்டிருக்கலாம். இதுகுறித்து மாதாந்திர உதவித்தொகை வழங்கவில்லை என கலெக்டர்களிடம் புகார் தெரிவித்திருக்கலாம் என்றார்.