/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது வாழ்வில் ஆழம் பெறவே
/
கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது வாழ்வில் ஆழம் பெறவே
ADDED : டிச 25, 2024 03:00 AM

பிறப்பு பல்வேறு செய்திகளை கொடுக்க கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு. அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையை கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. (லுாக் 2:1-2) என்ற இறைவார்த்தைகள் இதனை உறுதி செய்கின்றன. இயேசு குழந்தையாக பிறக்கிறார். இதையே கண்ணதாசன், இயேசு காவியத்தில்
''தச்சனுக்குப் பிள்ளை என்றும்
தாய் ஒருத்தி கன்னி என்றும்
இச்சனங்கள் சொன்னாலும்,
தெய்வ திரு குமரா தாலே லோ'' என்ற வார்த்தைகள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
இவ்வரிகள் குழந்தையாக பிறந்தவர் கடவுளின் திருமகன் என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. கடவுள் மனிதனாக பிறந்ததே நம் கொண்டாட்டத்திற்கான காரணம்.
லத்தீன் ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் பிலிப் நேரி தனது கட்டுரையில் இயேசுவினுடைய பிறப்பு அறிவிக்கப்படவும், உருவாக்கப்படவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வேண்டும் என்று சொல்கிறார். எதை அறிவிக்க வேண்டும் என்றால் இயேசுவினுடைய பிறப்பையும் இறையாட்சி பணியினையும் அறிவிப்பது திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரின் தலையான கடமையாகும்.
கிறிஸ்துவை பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் அதை கேட்க வாய்ப்பு உண்டு (உரோ 10:17) என்று புனித பவுல் கூறுகிறார். அறிவிக்கப்படுவதன் நோக்கம் என்னவென்றால் இயேசு கிறிஸ்து அனைவரிலும் உருவாக்கப்படுவதேயாகும். இதையே கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை உங்களிலும் இருக்கட்டும். (பிலி 2:5) என்ற இறைமொழி எடுத்துரைக்கிறது.
அறிவிக்கப்படுவதும், உருவாக்குவதும் எதற்கு என்றால் நம்மில் ஒரு மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே. இயேசுவினுடைய பிறப்பு நம்மில், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதாவது தனிமனிதனிலும், சமூகத்திலும் மாற்றத்தை கொண்டுவரும் பிறப்பாக அமைய வேண்டும்.
எத்தகைய மாற்றம் என்றால் நான், எனது என்ற சுயநலத்திலிருந்து நாம், நமது என்ற பிறர்நலம் நோக்கி நகர்வதன் மூலம் உருவாக வேண்டும். நம்மில், உலகில் மாற்றத்தை கொண்டு வருவதே இயேசு பிறப்பு நமக்கு தருகின்ற பாடம். நமது அறிவிப்பிலும், உருவாக்குவதிலும் நம்மிடையே மாற்றம் காண பிறக்கின்ற இயேசு ஆண்டவரை எளிமையிலும், தாழ்ச்சியிலும் கண்டுகொள்வோம்.
-- முனைவர் லுார்து ஆனந்தம்
சிவகங்கை மறைமாவட்ட பிஷப்
சிவகங்கை