/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் டிச.1 சம்பக சஷ்டி விழா
/
திருப்புத்துாரில் டிச.1 சம்பக சஷ்டி விழா
ADDED : நவ 19, 2024 05:22 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா டிச.1 ல் துவங்குகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவருக்கு ஆறுநாட்கள் சம்பக சஷ்டி விழா நடைபெறும். அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்த உலகை விடுவிக்க குமார ரூபமாக இருந்து அந்தகாசூரன், சம்பகாசூரன் ஆகியோரை பைரவர் வதம் செய்த நாளே சம்பக சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று விழா துவங்கும்.
இக்கோயிலில் விழா டிச.1ல் காலை 9:00 மணிக்கு யோகபைரவர் சன்னதி யாகசாலையில் அஷ்ட பைரவர் யாகத்துடன் துவங்கும். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாஹூதி, மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 4:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர் யாகம் துவங்கும். ஆறு நாட்களுக்கு தினசரி காலை, மாலை இரு நேரங்களில் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். டிச.6ல் சம்பகசஷ்டி விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை தேவஸ்தானம்,சம்பகசஷ்டி விழா குழுவினர் செய்கின்றனர்.