ADDED : ஜூலை 07, 2025 03:12 AM
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம், கண்டதேவி -சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழாவை முன்னிட்டு நாளை (ஜூலை 8) காலை 6:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனி திருவிழா கடந்த ஜூன் 30ல் கொடியேற்றம், காப்பு கட்டுடன் துவங்கியது. எட்டாம் நாளான இன்று மாலை சுவாமி குதிரையில் பாரிவேட்டைக்கு செல்கிறார்.
தொடர்ந்து ஒன்பதாம் நாளான நாளை அதிகாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள்வார்.
காலை 6:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான அனுமதி அட்டை உள்ளோர் மட்டுமே செல்ல வேண்டும். கண்டதேவியை சுற்றி தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.
தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா, டி.ஐ.ஜி., மூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஆலோசனை
தேரோட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பாரதி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேரோட்டத்தை கண்காணிக்க தேரோடும் வீதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் மூலம் கவனிக்கப்படுகிறது.
தேரோட்டம் சுமூகமாக நடப்பதைஉறுதி செய்ய 15 நிர்வாக நடுவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர் இழுப்பவர்களுக்கு தேவகோட்டை சப் கலெக்டர் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
மற்ற அலுவலர், பத்திரிக்கையாளர்களுக்கு தேவகோட்டை டி.எஸ்.பி., மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். பக்தர்களின் போக்குவரத்து வசதிக்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்தனர்.