/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது
/
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது
ADDED : ஆக 28, 2025 02:21 AM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவடைந்தது.
நகரத்தார் கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் விழா நடந்தது. ஆக.,18ல் கொடியேற்றத்துடன் இந்தாண்டு விழா துவங்கியது. 9ம் திருநாளில் தேரோட்டம், சந்தனக்காப்பில் மூலவர் அருள்பாலித்தல் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தங்கக்கவசத்தில் எழுந்தருளிய மூலவரையும், தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய உற்ஸவ விநாயகரையும் பக்தர்கள் தரிசித்தனர். காலை 10:00 மணியளவில் அங்குசத்தேவர் கோயிலை வலம் வந்தார். தங்க மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் திருநாள் மண்டபம் எழுந்தருளி அலங்காரத் தீபாராதனை நடந்தது. பின் விநாயகர், அங்குசத்தேவர் கோயில் தெற்கு படித்துறையில் எழுந்தருளினர்.
நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச்செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச்செட்டியார் முன்னிலையில் அங்குசத்தேவருக்கு தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சார்யார், ஸ்ரீதர் குருக்கள் சிவாச்சார்யார்கள் சிறப்பு பூஜை செய்தனர். 11 வகையான திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 10:33 மணிக்கு சோமசுந்தர குருக்களால் அங்குசத்தேவருக்கு குளத்தில் மும்முறை மூழ்கி தீர்த்தவாரி வைபவம் நடந்தது.
உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 18 படி பச்சரிசியால் ஆன முக்கூருணி மோதகம் எனப்படும் பெரிய கொழுக்கட்டை படையலிடப்பட்டது. மதியம் நடை சார்த்தப்படாமல் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் திருவீதி வலம் வர விழா நிறைவடைந்தது.