/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெளிநாடுகளுக்கு செல்லும் செட்டிநாடு பலகாரங்கள்
/
வெளிநாடுகளுக்கு செல்லும் செட்டிநாடு பலகாரங்கள்
ADDED : அக் 08, 2025 12:50 AM

சிவகங்கை; விமானம் மூலம் துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு செட்டிநாடு பலகாரங்கள் வாசனையுடன் பறக்கிறது.
சுவையான உணவு, பலகாரம் தயாரிப்பிற்கு உலகளவில் பிரசித்தி பெற்ற பகுதி செட்டிநாடு. செட்டிநாடு என்ற பெயரில் தான் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், நாடுகளில் ஏராளமானோர் ஓட்டல் நடத்தி வருகின்றனர். அந்தளவிற்கு சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு பகுதி சமையலுக்கு பிரசித்தி பெற்றவை.
பலகாரங்கள் தயாரிப்பிலும் செட்டிநாடு பகுதியை மிஞ்ச முடியாது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாவட்ட அளவில் காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்துார், தேவகோட்டை போன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நகரத்தார் வசிக்கும் 72 ஊர்களிலும் செட்டிநாடு பலகாரம் தயாரிப்பிற்கு பிரசித்தி பெற்ற நகரங்கள் ஆகும். தீபாவளி விற்பனைக்காக இங்கு ரீபைண்ட், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் தயாரிக்கும் கைமுறுக்கு, 4, 7 மற்றும் 9 கை சுற்று முறுக்கு, அதிரசம், மணகோலம், லட்டு, சீப்பு, உப்பு சீடை, பாசிபருப்பு மாவு நெய் உருண்டை, தட்டை, ரிப்பன் பக்கோடா, மசாலா முறுக்கு போன்று ஏராளமான பலகாரங்கள் தயாரிப்பிற்கு நிகரானவர்கள் செட்டிநாடு பகுதியை சேர்ந்த நகரத்தார்கள் தான்.
தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக நுாற்றுக்கணக்கான வீடுகளில் உணவு பாதுகாப்பு துறையின் சான்றினை பெற்று, பலகாரம் தயாரிக்கும் பணியில் வீட்டிற்கு 10 முதல் 15 பெண்களை பயன்படுத்தி பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
நாட்டரசன்கோட்டை எம்.ஆர்.,தேன்மொழி ஆச்சி கூறியதாவது, இங்கு ஆண்டு முழுவதும் செட்டிநாடு பலகாரம் தயாரிக்கப்படும். குறிப்பாக தீபாவளி நேரங்களில் மட்டுமே அதிகளவில் பெண்களை வேலைக்கு அமர்த்தி, பலகாரம் தயாரித்து விற்பனை செய்வோம். இங்கிருந்து மதுரை, சென்னை, கோயம்புத்துார் போன்ற நகரங்களுக்கு பலகாரங்களை வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்போம். வெளிநாடுகளில் வசிக்கும் செட்டிநாட்டு பகுதி மக்கள் தீபாவளிக்கு முன்பாக இங்கு வரும்போது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் வசிக்கும் உறவினர்களுக்கு வழங்க பலகாரங்களை வாங்கி செல்கின்றனர். கமகம வாசனைகளுடன் விமானங்களில் செட்டிநாடு பலகாரங்கள் வெளிநாடுகளுக்கு பறக்கின்றன என்றார். பலகாரம் ஆர்டருக்கு 90254 34207.