/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடைத்தரர்கள் பிடியில் மிளகாய் விவசாயிகள்... தவிப்பு : விலையும் மழையும் குறைந்ததால் கவலை
/
இடைத்தரர்கள் பிடியில் மிளகாய் விவசாயிகள்... தவிப்பு : விலையும் மழையும் குறைந்ததால் கவலை
இடைத்தரர்கள் பிடியில் மிளகாய் விவசாயிகள்... தவிப்பு : விலையும் மழையும் குறைந்ததால் கவலை
இடைத்தரர்கள் பிடியில் மிளகாய் விவசாயிகள்... தவிப்பு : விலையும் மழையும் குறைந்ததால் கவலை
ADDED : டிச 20, 2025 06:35 AM

எஸ்.புதுார்:எஸ்.புதுார் ஒன்றியத்தில் மிளகாய் விலையும், மழையும் குறைந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், விவசாயிகள் பலர் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கின்றனர்.
மலைத்தொடர்களுக்கு நடுவே அமைந்துள்ள இவ்வொன்றியத்தில் விவசாயிகள் பலர் மிளகாய் சாகுபடி செய்கின்றனர். ஆண்டுதோறும் 1000 ஏக்கர் வரை இப்பகுதியில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக விவசாயிகள் பலர் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
விவசாயிகளின் வறுமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில இடைத்தரகர்கள் விதை, நாற்று, உரம் என அனைத்தையும் அவர்களே கொடுத்து முன் பணத்தையும் வழங்கி மிளகாய் தோட்டத்தை முன்கூட்டியே புக் செய்து விடுகின்றனர். இதனால் அறுவடை நேரங்களில் இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு, அவர்களிடமே விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு அறுவடை காலங்களில் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மிளகாய் அனுப்பி வைக்கப்படுகிறது. சில ஆண்டுகளாக விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்ததால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இடைத்தரகர்களின் தலையீடு காரணமாகவும் முழு அளவில் அறுவடை பயன் கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் வழங்கும் விதை, நாற்றுகள் சில நேரங்களில் வீரியமில்லாமல் போய் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. தரமான விதை, நாற்றுகள் கிடைக்க தோட்டக்கலைத் துறையினர் அவ்வப்போது உதவி வந்தனர். தற்போது அத்துறையில் பணியிட குறைப்பை கண்டித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் சென்றுள்ளனர்.
இதனால் அவர்களது ஆலோசனை, உதவி கிடைக்காமல் மிளகாய் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். தற்போது 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மிளகாய் நடவு துவக்கியுள்ளனர். ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு அதிகரித்தாலும் லாபம் கிடைக்கவில்லை. வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டாலும் வேறு வழி இல்லாமல் மிளகாய் மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் அறுவடையாகும் மிளகாய்களை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி சந்தைப்படுத்த இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வந்தால் மட்டுமே தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள், அவர்கள்.

