/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாரச்சந்தை நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி
/
வாரச்சந்தை நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி
வாரச்சந்தை நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி
வாரச்சந்தை நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி
ADDED : ஏப் 14, 2025 05:22 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் மெயின் ரோட்டிலேயே வாரச்சந்தை நடப்பதால்,வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்படுகிறது.இதனால், பஸ்கள் நகருக்குள் வர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்புவனத்தில் செவ்வாய் தோறும் கால்நடை மற்றும் காய்கறி சந்தையும் நடைபெறும். வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கருவாடு என 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.
சந்தைக்கு என தனியாக இடம் தேர்வு செய்து ஒதுக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் பலரும் ரோட்டிலேயே காய்கறிகள், பழங்களை வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதோடு, விபத்தும் அடிக்கடி நேரிடுகிறது.
பொருட்கள் வாங்க வருபவர்களும் ரோட்டிலேயே நிற்பதால் டூவீலர்கள் செல்ல கூட பாதை இருப்பதில்லை. ரோட்டில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால் தொலைதூர பேருந்துகளும் நகருக்குள் வர மறுத்து பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் செவ்வாய் அன்று நகருக்குள் பஸ்களை ஓட்டி வரவே டிரைவர்கள் அச்சமடைகின்றனர். திருப்புவனம் வழியாக தினமும் பஸ்கள் சென்று வருகின்றன.
ரோட்டிலேயே பலரும் கடைகளை பரப்பி வைத்து வியாபாரம் செய்வதால் பஸ்சை ஓட்டவே முடியவில்லை.
லேசாக இடித்தால் போதும் கூட்டமாக சேர்ந்து கொண்டு பஸ் டிரைவர்களுடன் தகராறு செய்கின்றனர். சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட இடம் மர நிழலுடன் தாராளமாக உள்ள நிலையில் ஒரு சில வியாபாரிகள் ரோட்டில் கடைகள் அமைப்பதால் பலரும் ரோட்டிற்கு வந்து விடுகின்றனர். வாரம்தோறும் நகருக்குள் ஆட்டோ செல்ல கூட பாதையில்லை.
காலை எட்டு மணி தொடங்கி இரவு பத்து மணி வரை ரோட்டில் சந்தை நடைபெறுகிறது. பலமுறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து போலீசார் கூறியதாவது, ரோட்டில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகளிடம் பேரூராட்சி கட்டணம் வசூலிப்பது தவறு.
போலீஸ் கடைகளை அகற்ற முயற்சித்தால் கட்டண ரசீதை காண்பித்து தகராறு செய்கின்றனர்.
பேரூராட்சி அதிகாரிகளுடன் இணைந்து தான் ரோட்டில் கடைகள் வைப்பதை தடுக்க முடியும் என்றனர்.