சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா வழியாக வைகை ஆறு செல்கிறது. வடகிழக்கு பருவமழை, கோடை மழை, வைகை அணையில் நீர் திறப்பு உள்ளிட்ட காலங்களில் கண்மாய்கள், குளங்கள், பள்ளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் தேங்குவது வழக்கம். வைகை ஆற்றுப்படுகை, கண்மாய், குளம் உள்ளிட்டவற்றில் மணல் திருட்டு அதிகளவில் நடந்துள்ளது.
மணல் திருட்டு காரணமாக ஏற்பட்ட பள்ளங்களில் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பது வழக்கம். இந்த பள்ளங்களில் உள்ள தண்ணீர் எளிதில் ஆவியாகாது, காரணம் கீழே நீருற்று உருவாகி தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நிற்பதுடன் கீழே சகதியாகவும் மாறி விடும்.
ஆபத்தை உணராமல் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலரும் இந்த பள்ளங்களில் குளிக்க, மீன் பிடிக்க சென்று உயிரிழக்கின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் ஒரு மழலையர் பள்ளி, 72 ஆரம்பபள்ளி, 37 நடுநிலைப்பள்ளிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள், 20 மெட்ரிக் பள்ளிகள், 13 மேல்நிலைப்பள்ளிகள், 7 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என 162 பள்ளிகளில் 17 ஆயிரத்து 248 மாணவர்களும், 15 ஆயிரத்து 130 மாணவிகள் உட்பட 32 ஆயிரத்து 578 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் திருப்புவனம் மேம்பாலம் அருகிலும், லாடனேந்தல் தடுப்பணை அருகிலும் மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளன. குறைந்த பட்சம் 30 முதல் 50 அடி ஆழம் வரை உள்ள இந்த பள்ளங்களில் சேதமடைந்த பாலங்களின் இடிபாடுகளும் கொட்டப்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் நீர் வற்றவே வற்றாது.
இதில் பலரும் ஆபத்தை உணராமல் குளிக்க, மீன் பிடிக்க சென்று உயிரிழந்துள்ளனர்.
பல முறை இந்த பள்ளங்களை மூட வேண்டும் என வலியுறுத்தியும் அது நிறைவேறவில்லை. நேற்று முன்தினம் தாஹிர் என்ற 8ம் வகுப்பு மாணவன் நண்பர்களுடன் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருப்புவனம் புதூரில் இருந்து 3 கி.மீ., தூரம் குளிக்க சென்று உயிரிழந்தது பெற்றோரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும்.
கண்மாய், குளங்கள், பள்ளங்களில் குளிக்க, மீன் பிடிக்க செல்ல கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. சாலை விதிகளை பின்பற்றி சாலைகளை கடக்க வேண்டும் என ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும்.நீர்நிலைகளில் சிறுவர்கள் உயிரிழப்பது பெரும்பாலும் விடுமுறை தினங்களில் தான் நடைபெறுகிறது.
பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்ற பின் தனியாக இருக்கும் சிறுவர்கள் நண்பர்களுடன் ஆபத்தை உணராமல் குளிக்க சென்று உயிரிழக்கின்றனர். இதுவரை திருப்புவனம் பகுதிகளில் தான் நீர்நிலைகளில் மாணவ, மாணவியர்கள் உயிரிழப்புகள் அதிகம் நடந்துள்ளன.
மாவட்டத்திலேயே திருப்புவனம் பகுதிகளில் தான் எல்லா காலங்களிலும் கண்மாய், குளங்கள், பள்ளங்களில் தண்ணீர் இருப்பது வழக்கம். எனவே முன்னுரிமை வழங்கி திருப்புவனம் பகுதி பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த அரசு முன்வரவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.