
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் பிரதான சாலையின் இருபுறமும் மளிகை கடைகள், ஓட்டல்கள், ஹார்டுவேர் கடைகள், காய்கறி, பழங்கள் விற்பனை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் தங்களது தேவைகளுக்கு திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
கிராமப்புற மக்கள் பலரும் பொருட்கள் வாங்க பழைய நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வியாபாரிகள் உள்ளிட்டோர் வாங்க மறுத்து வருகின்றனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள பழைய நூறு ரூபாய் நோட்டுகள் 1996ல் அறிமுகப்படுத்தப்பட்டன. சற்று அகலம், நீளமாகவும் உள்ள இந்த நோட்டுகள் ஏராளமாக புழக்கத்தில் உள்ளன.
கடந்த 2018ல் புதிய நூறு ரூபாய் நோட்டுகள் ஒரு புறம் குஜராத்தின் ராணி கி வாவ்/ன் படமும், மறுபுறம் மகாத்மா காந்தி படமும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. புதிய 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளுடன் புதிய நோட்டுகளை இணைத்து எண்ண முடியவில்லை.
நோட்டு எண்ணும் இயந்திரத்திலும் சேர்த்து வைத்து பயன்படுத்த முடியவில்லை என்பதால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். இதனால் கிராமப்புற மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே பத்து ரூபாய் நாணயங்களை பலரும் வாங்க மறுத்து பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பழைய நூறு ரூபாய் நோட்டையும் வாங்க மறுப்பதால் சிரமம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் பழைய நூறு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

