/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முடக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்
/
முடக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்
ADDED : மார் 20, 2025 06:07 AM

பூவந்தி: பூவந்தியில் நான்கு நாட்களுக்கும் மேலாக தற்காலிக நெல் கொள்முதல் மையம் இயங்காததால் விவசாயிகள் வேதனையுடன் காத்து கிடக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 12ம் தேதி முதல் தற்காலிக நெல் கொள்முதல் மையங்கள் திருப்புவனம், திருமாஞ்சோலை உள்ளிட்ட 42 இடங்களில் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தினசரி நெல் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் பூவந்தி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் மூடைக்கு 35 ரூபாய் கூடுதலாக வசூலித்ததாகவும் அதனை கேட்ட சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யம்பாண்டியை சிலர் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து பூவந்தி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட நெல் மூடைகளுடன் தற்காலிக நெல் கொள்முதல் மைய வாசலில் காத்து கிடக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்: தற்போது தான் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். வேண்டுமென்றே பிரச்னை செய்து நெல் கொள்முதல் மையத்தை நிறுத்தி விட்டனர். நான்கு மாதம் கடன் வாங்கி பயிரிட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் வெயிலில் காத்து கிடக்கிறோம், கடும் வெயில் காரணமாக நெல் மூடைகளின் எடையும் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் கொள்முதலை தொடங்க வேண்டும், என்றனர். அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: இன்னும் ஒருசில நாட்களில் நெல் கொள்முதல் செய்யப்படும், என்றனர்.