ADDED : மே 27, 2025 12:52 AM

மானாமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளை குடிநீர் திட்ட ஊழியர்கள் மூடினர்.
திருச்சியிலிருந்து சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆங்காங்கே குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
மானாமதுரை நகர்ப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் நீண்ட நாட்களாக மூடாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக வழி விடு முருகன் கோயில் அருகே குழி தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் மூடாமல் இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.
நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஊழியர்கள் நேற்று அப்பகுதியில் குழியை மூடினர்.