/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாய கடன் வழங்க நிதியில்லை மூலதன தொகை பற்றாக்குறையால் கூட்டுறவு வங்கிக்கு சிக்கல்

ADDED : மார் 14, 2024 02:54 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் நிதியில்லாததால் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்கள் நிறுத்தியுள்ளன.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 33 கிளைகள், 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு, மகளிர் குழு, நகை அடமானம், தொழிற்கடன் என ஆண்டுதோறும் ரூ.700 கோடி வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஆண்டு வரம்பை விட அதிகமாக ரூ.1,300 கோடி வரை கடன் வழங்கி விட்டனர்.
ரிசர்வ் வங்கி விதிப்படி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குதலுக்கு ஏற்ப டெபாசிட் சேகரிப்பையும், ரொக்க இருப்பையும் பராமரிக்க வேண்டும். ஆனால் அவற்றை மத்திய கூட்டுறவு வங்கி அதிகரிக்கவில்லை.
நிதியில்லாததால் ஜனவரி முதல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன், நகை அடமான கடன், கால்நடை வளர்ப்பு கடன், மகளிர் குழு கடன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.
கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி விதிப்படியான ரொக்க இருப்பு சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் இல்லை. இதற்காக தமிழக அரசிடம் ரூ.10 கோடி நிதி கேட்டோம். ஆனால் அரசு, மாநில கூட்டுறவு வங்கியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறிவிட்டது. ஏற்கனவே நிலுவை இருப்பதால் அவர்களும் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் விவசாய கடன் வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது என்றார்.