/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் அதிகரிக்கும் தென்னை சாகுபடி
/
சிங்கம்புணரியில் அதிகரிக்கும் தென்னை சாகுபடி
ADDED : டிச 26, 2025 05:32 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் தென்னை சாகுபடி அதிகரித்து வரும் நிலையில் தென்னை நாற்றுப் பண்ணையை விரிவுபடுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தாலுகாவில் பாலாறு, உப்பாறு, மணிமுத்தாறு கரைப்பகுதி கிராமங்களில் பல ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான ஆயில் மில்களும் உள்ளன. சில ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் பலர் நெல் சாகுபடியில் இருந்து தென்னைக்கு மாறி வருகின்றனர்.
அதே நேரம் அவர்களுக்கு தென்னை நாற்றுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இப்பகுதியில் சதுர்வேத மங்கலம் கிராமத்தில் அரசு தென்னை நாற்று பண்ணை உள்ளது. இங்கு குட்டை, நெட்டை தென்னை நாற்றுகள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இப்பண்ணையில் தென்னை நாற்றுகளை விவசாயிகள் பெற்று செல்கின்றனர்.
இப்பகுதியில் தென்னை சாகுபடி அதிகரித்து வரும் நிலையில் தென்னை நாற்றுகளின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இப்பணையை விரிவுபடுத்தி அதிக நாற்றுகளை உற்பத்தி செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பண்ணையை பார்வையிட்ட அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூடுதல் நிலத்தில் பண்ணையை விரிவுபடுத்த தேவையான ஆய்வு பணிகளை துவங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு அப்படியே உள்ளது. குறுகலான இடத்திலேயே பண்ணை செயல்படுகிறது. எனவே விவசாயிகள் தேவைக்கு ஏற்ப அதிக தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்யும் வகையில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையை விரிவுபடுத்த வேண்டும்.

