ADDED : டிச 17, 2024 03:58 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேங்காய் விளைச்சல் குறைவால் மற்ற எண்ணெய் வகைகளை விட தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கடலை, தென்னை விவசாயம் அதிகம் நடைபெறும் சிங்கம்புணரியில் ஏராளமான எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. சில மாதங்களாக கடலெண்ணெய் தவிர மற்ற எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு லிட்டர் 85 ரூபாய்க்கு விற்ற பாமாயில், தற்போது 135 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாமாயில் உயர்வைத் தொடர்ந்து சமையலுக்கு பயன்படும் காட்டன் ஆயில் உள்ளிட்ட அனைத்து எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் 120 ரூபாய்க்கு விற்ற நிலையில் இரண்டே மாதத்தில் 230 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. தேங்காய் விளைச்சல் குறைந்ததேவிலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் வியாபாரிகள்.
கே.குபேரன், சமையல் எண்ணெய் உற்பத்தியாளர், சிங்கம்புணரி: மார்க்கெட்டில் அனைத்து எண்ணெய்களும் விலை உயர தொடங்கியுள்ளது. தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்து எண்ணெய் வகைகளும் கடந்த மூன்று மாதத்தில் சராசரியாக 50- 60 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
கடலை எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களாக குறையவோ, கூடவோ இல்லை. இந்த எண்ணெய்க்கு தேவை அதிகரிக்காததும், விலை குறைப்புக்கு கட்டுப்படியாகாத சூழல் நிலவுவதாலும் விலை அப்படியே உள்ளது, என்றார்.

