/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேங்காய் எண்ணெய் விலை கடும் உயர்வு
/
தேங்காய் எண்ணெய் விலை கடும் உயர்வு
ADDED : நவ 14, 2025 04:27 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தேங்காய் எண்ணெய் விலை இரு மடங்காக உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் வைகை ஆற்றை ஒட்டி திருப்புவனம், மடப்புரம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, கானுார் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்தாண்டு போதிய கோடை மழை இல்லாததால் தென்னை மரங்களில் காய்ப்பு திறன் குறைந்து விட்டது. விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கொப்பரை தேங்காய் வரத்து இல்லை. திருப்புவனம் பகுதி தேங்காய் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு போக உள்ளுரில் உள்ள எண்ணெய் தயாரிப்பாளர்களிடம் விவசாயிகள் விற்பனை செய்வார்கள். கடும் வறட்சி காரணமாக கொப்பரை தேங்காய் வரவே இல்லை.
திருப்புவனம் தனசேகரன் செக்கு எண்ணெய் வியாபாரி கூறுகையில் :
ஒரு வாரத்திற்கு இருபது மூடை ( ஒரு மூடை 50கிலோ) கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவார்கள், கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு ஐந்து மூடை வரையிலேயே கொண்டு வருகின்றனர். இதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைந்து விட்டது, என்றார்.
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் கடந்த ஜூலை , ஆகஸ்ட் வரை 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. பிரபல நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

