/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்களில் சேரும் பிளாஸ்டிக் கழிவு
/
கண்மாய்களில் சேரும் பிளாஸ்டிக் கழிவு
ADDED : நவ 14, 2025 04:27 AM

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கண்மாய்களில் ஆற்றில் இருந்து அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவு சேர்ந்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்புவனம் தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 62 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றியம் மற்றும் அந்தந்த கோயில்கள் கட்டுப்பாட்டில் 159 கண்மாய்கள் உள்ளன. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப் படுகிறது.
வைகை ஆற்றில் திருப்புவனம் நகர் மட்டுமல்லாது ஆற்றை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ச்சியாக குப்பையை கொட்டி வருகின்றன. தரம் பிரிக்காமல் அப்படியே குப்பை கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவு, கட்டுமான பொருட்கள், சிமென்ட் சாக்குகள், பழ கழிவு, இறைச்சி கழிவு, உயிரிழந்த நாய், மாடு உள்ளிட்டவைகள் என பல தரப்பட்ட குப்பை கொட்டி வந்தனர்.
சமீபத்திய மழையாலும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தது. நீர்வரத்தின் போது ஆற்றில் கொட்டப்பட்ட குப்பை, பிளாஸ்டிக் கழிவு அடித்து வரப்பட்டு கண்மாய்களுக்குள் வந்துள்ளன. பல இடங்களில் ஆங்காங்கே மர கிளைகள், நாணல், கருவேல மரங்களில் பிளாஸ்டிக் பைகள், சிமென்ட் பைகள் சிக்கியுள்ளன.
தொடர்ச்சியாக கண்மாய்களில் பிளாஸ்டிக் பைகள் சேர்வதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் இறைச்சி கழிவு, ரசாயன கழிவுஅடித்து வரப்படுவதால் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது கை, கால்களில் அரிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

