/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தேங்காய் விலை உயர்வு
/
திருப்புவனத்தில் தேங்காய் விலை உயர்வு
ADDED : ஜூன் 30, 2025 04:27 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.
தென் மாவட்டங்களில் சோழவந்தானுக்கு அடுத்தபடியாக திருப்புவனத்தில் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. திருப்புவனம் பகுதியில் இருந்து மத்தியபிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேங்காய்கள் விற்பனைக்கு செல்கின்றன. மற்ற பகுதி தேங்காய்களை விட திருப்புவனம் தேங்காய் ருசி அதிகம். நெட்டை ரக தென்னை மரங்களில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது. ஒரு மரத்திற்கு 60 தேங்காய்கள் வரை கிடைக்கும். தொடர்ச்சியான மழை காலங்களில் விளைச்சலும் அதிகமாக இருக்கும். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்., முதலே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததுடன் மழை பெய்யவே இல்லை. மேலும் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் மட்டைகள் பச்சை நிறத்தை இழந்தது. இதனால் தேங்காய் விளைச்சலும் கடுமையாக பாதித்தன. ஒரு மரத்திற்கு 15 காய்கள் மட்டுமே கிடைக்கிறது. ஏக்கருக்கு 4,500 தேங்காய்கள் வந்தநிலையில், தற்போது 2,000 காய்கள் மட்டுமே வருகின்றன. கொப்பரை தேங்காய்க்கு காங்கேயம் வியாபாரிகள் அதிகளவில் தேங்காய்கள் வாங்குவதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு தேங்காய் ரூ.9 ல் இருந்து ரூ.16 ஆக உயர்ந்துவிட்டது. கிலோவிற்கு ரூ.45 என விற்ற தேங்காய் ரூ.71 ஆக உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு 1,125 தேங்காய் ரூ.7,500க்கு விற்றது. தற்போது அதன் விலை ரூ.16,000 உயர்ந்துவிட்டன. லாரியில் 16 டன் வரை ஏற்றலாம். விளைச்சல் பாதிப்பால் லாரிகளில் எடுத்து செல்வது குறைந்துவிட்டது. டிசம்பர் வரை தேங்காய் விலை குறைய வாய்ப்பில்லை. ஜன.,க்கு பின் தான் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
//