/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைந்த தண்ணீரில் மகசூல் தரும் தென்னை
/
குறைந்த தண்ணீரில் மகசூல் தரும் தென்னை
ADDED : மே 28, 2025 11:37 PM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் குறைந்த அளவு தண்ணீரில் மகசூல் தரக்கூடிய தென்னை ஆராய்ச்சியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, எஸ். புதுார் திருப்புவனம் மானாமதுரை சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தால் தென்னை விவசாயம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீரில் தென்னை விவசாயம் செய்வதற்கு வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் செந்துார் குமரன் கூறுகையில், தென்னைக்கு நாளொன்றுக்கு 80 லிட்டர் தண்ணீர் தேவை. போதிய தண்ணீர் கிடைத்தால் மட்டுமே ஆண்டுக்கு ஒரு மரத்தில், 80 முதல் 100 காய்கள் வரை காய்ப்பு கிடைக்கும்.
சிவகங்கை மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் தென்னை விவசாயமே கேள்விக்குறியாக உள்ளது.
இதனை நிவர்த்தி செய்யும் விதமாக குறைந்த அளவு தண்ணீரில், தென்னை விவசாயம் மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
11 நாடுகளில் இருந்து வறட்சியை தாங்கும் தென்னங்கன்றுகள் கொண்டு வரப்பட்டு பிரான்மலை அருகே மேலப்பட்டியில் 10 ஏக்கரில் நடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது இவை காய்ப்புக்கு தயாராக உள்ளன. தென்னை விவசாயத்திற்கு 80 லிட்டரில் இருந்து 60 லிட்டர், 40 லிட்டர் என படிப்படியாக குறைக்கப்பட்டு 20 லிட்டராக குறைக்க ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு கலப்பினம் செய்யப்பட்டு நுாறு தென்னை மரங்கள் அடுத்த கட்டமாக நடவு செய்யப்பட்டு ஆய்வுகள் நடைபெறும். வறட்சியை தாங்கி, குறைந்த தண்ணீரில் தென்னை விவசாயம் என்ற இலக்கோடு இந்த ஆய்வு நடந்து வருகிறது.