/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெள்ளை ஈ தாக்குதலால் நிறம் மாறும் தென்னை
/
வெள்ளை ஈ தாக்குதலால் நிறம் மாறும் தென்னை
ADDED : ஏப் 22, 2025 05:55 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் வெள்ளை ஈ தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து தென்னை மரங்களின் நிறம் கருப்பாக மாறி வருவதால் தேங்காய் விளைச்சல் கேள்விக்குறியாகி உள்ளது.
வைகை பாயும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம்,கானூர், கல்லூரணி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
தென்னை மரங்களில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் அறுவடை நடைபெறுகிறது. தென்னை மட்டைகளில் இருந்து கிடுகு, தட்டி, துடைப்பம்உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்பாசேத்தி, மழவராயனேந்தல் பகுதியில் கடந்த சில வருடங்களாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெள்ளை ஈ வெகு வேகமாக பரவி வருகிறது.
வெள்ளை ஈ தென்னை மட்டைகளின் பின்புறம் கூடு கட்டி ஓலைகளின் பச்சையத்தை உண்டு வாழ்கிறது. ஒரு மட்டையில் குடியேறும் வெள்ளை ஈக்கள் அடுத்தடுத்து மட்டைகளில் பரவி பச்சையத்தை உறிஞ்சுவதுடன் வெகு வேகமாக அடுத்த மரங்களுக்கும் பரவி வருகிறது.
வெள்ளை ஈ தாக்கிய மட்டைகள் கருப்பு நிறமாக மாறி தென்னந்தோப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறி வருகிறது. நோய் தாக்கிய மட்டைகள் காய்ந்து உதிர்வதால் தேங்காய் விளைச்சலும் பாதிக்கப்பட்டு வருகிறது. நோய் தாக்கிய மட்டைகளில் இருந்து கிடுகு, தட்டி, விசிறிகளும் தயாரிக்க முடியாததால் மட்டைகள் வீணாகி நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
60நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு வந்த நிலையில் நோய் தாக்கியதால் காய்கள்வெட்டுவதும் தாமதமாகி தென்னை விவசாயத்தை நஷ்டமாக்கி வருகின்றன. வேளாண் துறை பரிந்துரைக்கும் மருந்துகளால்எந்த வித பயனும் இல்லாத நிலையில் மட்டைகள் காய்ந்து மரம் பட்டுபோவதை தடுக்கவும் வேறு மரங்களுக்கு பரவாமல் இருக்கவும் மரங்களை வெட்டி வருகின்றனர்.
ஏற்கனவே திருப்புவனம் பகுதியில் தென்னை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் வெள்ளை ஈ தாக்குதலால் மரங்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறது.
புதிய மரங்கள் நடவு செய்ய எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் இருக்கும் மரங்களும் நோய் தாக்குதலால் அழிக்கப்படுவதால் தென்னை விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.