/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வாரச்சந்தையில் கடை ஒதுக்கீட்டில் கடை ஒதுக்க அட்வான்ஸ் கேட்பதாக புகார்
/
சிவகங்கை வாரச்சந்தையில் கடை ஒதுக்கீட்டில் கடை ஒதுக்க அட்வான்ஸ் கேட்பதாக புகார்
சிவகங்கை வாரச்சந்தையில் கடை ஒதுக்கீட்டில் கடை ஒதுக்க அட்வான்ஸ் கேட்பதாக புகார்
சிவகங்கை வாரச்சந்தையில் கடை ஒதுக்கீட்டில் கடை ஒதுக்க அட்வான்ஸ் கேட்பதாக புகார்
ADDED : செப் 19, 2024 04:53 AM

சிவகங்கை தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள வாரச்சந்தை ரூ.3.89 கோடி செலவில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டு கடந்த வாரம் அமைச்சர் உதயநிதியால் காரைக்குடியில் இருந்து கானொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது.சந்தை வளாகத்தில் 172 காய்கறி கடைகள்,12 மீன் கடைகள், 1 காவலர் அறை,ஆண், பெண் கழிப்பறை,பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
புதன் சந்தையான நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.கடைகள் அமைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் போலீசார் வந்து சமரசம் செய்தனர். இந்த சந்தையை சிவகங்கை கொட்டக்குடியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று சந்தையினுள் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் வியாபாரிகளுக்கும் ஒப்பந்ததாரர் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
சருகு வலையபட்டி வியாபாரி ஆண்டாள் அம்மாள் கூறுகையில், நான் இந்த சந்தையில் 30 வருடங்களாக செடிகள் விற்பனை செய்து வருகிறேன். இது நாள் வரை வாரச்சந்தையில் கட்டடப் பணி நடைபெற்றதால் சந்தை ரோட்டில் நடந்தது. ரோட்டில் கடை அமைக்க 100 ரூபாய் வசூல் செய்தனர். தற்போது சந்தைக்குள் கடை வைக்க ஒப்பந்ததாரர் தரப்பில் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர்.
அவ்வளவு பணம் கொடுத்து வியாபாரம் செய்ய எங்களால் முடியாது. இந்த சந்தை வியாபாரத்தை நம்பி தான் எங்களது குடும்பமே உள்ளது. எங்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் தான் லாபம் கிடைக்கும். அதில் எப்படி நாங்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து கடை வைக்க முடியும்.
கிடாரிபட்டி வியாபாரி அழகு கூறுகையில், நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த சந்தையில் வாழைப்பழம், காய்கறிகள் விற்று வருகிறேன். நேற்று திடீரென்று சந்தையில் கடை வைக்க வேண்டும் என்றால் அட்வான்ஸ் பணம், சந்தையில் கடை அமைக்க வாரத்திற்கு 100 ரூபாய், மூடைக்கு ரூபாய் 60 கேட்கிறார்கள். பணம் கொடுத்தால் மட்டும் தான் சந்தைக்குள் அனுமதி. இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என எங்களை துரத்துகின்றனர்.
பணம் கொடுத்து எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. சரி ரோட்டிலாவது கொண்டு வந்த காய்கறிகளை விற்பனை செய்யலாம் என்றால் அதையும் நகராட்சி நிர்வாகம் தடுக்கிறது.மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு சந்தையை முறைப்படுத்தி நகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ.,நகர் தலைவர் உதயா கூறுகையில், சந்தையில் கடையில் வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கடையை அட்வான்ஸாக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கொடுத்தால் தான் வியாபாரிகளுக்கு ஒதுக்குவோம் என ஒப்பந்ததாரர் மிரட்டுவதாக வியாபாரிகள் புகார் கூறுகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சந்தையை முறைபடுத்த வேண்டும். இல்லாவிடில் வியாபாரிகளுடன் மக்களை திரட்டி பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஒப்பந்ததாரர் தரப்பில் கௌதம் கூறுகையில், சந்தையில் மொத்த வியாபாரிகள் 400க்கு மேல் இருக்கின்றனர். ஆனால் கடைகள் மொத்தம் 183 தான் உள்ளது. வியாபாரிகள் அதிகம் வந்திருப்பதால் சந்தை கட்டடத்திற்குள் இருக்கின்ற கடை போக மீதியுள்ள இடத்தை பிரித்துக் கொடுக்கிறோம். நாங்கள் யாரிடமும் கடைக்கென்று தனியாக பணம் வசூலிப்பதில்லை. நகராட்சி நிர்ணயிக்கக் கூடிய பணத்தை தான் வசூல் செய்கிறோம். இது பொய்யான குற்றச்சாட்டு என்றார்.
இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கூறுகையில், சந்தைக்குள் வியாபாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் பிரச்னை என்று தகவல் வந்தது. அங்கு சென்று விசாரித்தோம். அவர்களுக்குள் கடை வைப்பதில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் எதுவும் புகார் தெரிவிக்கவில்லை என்றார்.
கமிஷனர் கிருஷ்ணராம் கூறுகையில், பணம் வசூல் செய்வது குறித்து வியாபாரிகள் எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை. வியாபாரிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.