ADDED : ஜன 04, 2025 04:01 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகளாகியும் சுற்றியுள்ள விரிவாக்க பகுதிகள் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த பகுதி எவை,எவை நகராட்சியோடு இணைக்கப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளிவராமல் உள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மதுரை,சிவகாசி உட்பட 19 மாநகராட்சிகள் விரிவாக்கம் மற்றும் 50 நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம் மேலும் புதிதாக 13 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பேரூராட்சி நகராட்சியாகவும் தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால் ஊராட்சி முழுமையாகவும், வாணியங்குடி ஊராட்சியில் சில பகுதிகளும் இணைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாற்றப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகியும் சுற்றியுள்ள ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகள் எவை, எவை மானாமதுரை நகராட்சியோடு சேரும் என இதுவரை அரசு சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறியதாவது: மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக ஆணை வெளியான போது அருகே உள்ள விரிவாக்க பகுதிகளான கல்குறிச்சி, மாங்குளம், சூரக்குளம் பில்லறுத்தான், மேலப்பசலை, கீழமேல்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதிகள் இணைக்கப்படும் என தெரிவித்தனர்.
அதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தினர். இதில் மாங்குளம் மற்றும் சூரக்குளம் பில்லறுத்தான் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் நகராட்சியோடு சேர்க்கக்கூடாது என போராட்டமும் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சியாக இருந்தபோது இருந்த 18 வார்டுகளை நகராட்சியாக மாறிய பிறகு 27 வார்டுகளாக மாற்றி நகராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்து நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில பேரூராட்சி மற்றும் நகராட்சியோடு சேர்க்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் 3 வருடங்களுக்கு முன்பே மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்னும் எந்தெந்த பகுதிகள் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகாமல் உள்ளதால் குழப்பத்தில் உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மானாமதுரை நகராட்சியோடு சேரும் பகுதிகள் எவை,எவை என்பது குறித்த அரசிடம் இருந்து உத்தரவு வந்த பிறகு தெரிவிக்கப்படும் என்றனர்.