/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியை நகராட்சியாக அறிவிக்காததால் நெரிசல்; இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிப்பு
/
சிங்கம்புணரியை நகராட்சியாக அறிவிக்காததால் நெரிசல்; இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிப்பு
சிங்கம்புணரியை நகராட்சியாக அறிவிக்காததால் நெரிசல்; இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிப்பு
சிங்கம்புணரியை நகராட்சியாக அறிவிக்காததால் நெரிசல்; இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிப்பு
ADDED : ஜன 18, 2025 07:35 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்காத நிலையில் நெரிசல், இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் வர்த்தக நகரான சிங்கம்புணரியில் இடநெருக்கடி போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து இங்கு வேலைக்கு வருவோர் நிரந்தரமாக தங்கி விடுவதால் குடியிருப்புகளும் மக்கள் நெருக்கடியும் அதிகரித்து, கடைவீதியில் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகிவிட்டது.
அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு புறம்போக்கு இடங்களும் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் இப்பேரூராட்சியை சுற்றியுள்ள சில பகுதிகளை இணைத்து நகராட்சியாக அறிவிக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அறிவிக்கலாம் என்ற தகவல் வந்தது.
அந்தந்த ஊராட்சி சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 5 வார்டுகளை மட்டும் சிங்கம்புணரியுடன் இணைத்து மீண்டும் பேரூராட்சியாகவே தொடரும் என அறிவிப்பு வெளியானது. இதனால் நகர் பகுதி மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் அருகே உள்ள ஊராட்சிகளை சேர்ந்த கட்சியினர் சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, நகராட்சியாக மாறவிடாமல் தடுத்து வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஏற்கனவே நகர்பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு இடம் கிடைக்காதநிலையில் குப்பை, கழிவுநீர் உள்ளிட்டவை பேரூராட்சியில் இருந்து அருகே உள்ள கிராமங்களுக்கும், கிராமங்களில் இருந்து பேரூராட்சி பகுதிகளுக்கும்பரஸ்பரம் மாற்றி கொட்டப்படுவதால் எல்லை பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.
அரசினம்பட்டி கண்மாய் உள்ளிட்ட சில இடங்களில் சுகாதார சீர்கேடு பல ஆண்டுகளாக தொடர்கிறது. நகராட்சியாக அறிவிக்கப்பட்டு எல்லை விரிவாக்கப்படும்போது ஒரே நிர்வாகத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்தி இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். இதற்கிடையில் நகராட்சியோடு இணையும்போது தங்களுக்கு வேலை உறுதித்திட்டத்தில் வேலை கிடைக்காமல் போய்விடும்என சில இடங்களில் பெண்கள் அஞ்சுகின்றனர்.
நகராட்சியோடு இணைத்தாலும் புதிதாக சேரும் கிராமப் பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வேலை உறுதி திட்டத்தில் வேலை தொடர சிறப்பு உத்தரவை அரசு பிறப்பிக்கவேண்டும் என்று நகர்நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.