/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
↓காளையார்கோவிலில் தொடரும் ஆக்கிரமிப்புகள் l
/
↓காளையார்கோவிலில் தொடரும் ஆக்கிரமிப்புகள் l
ADDED : ஜூன் 27, 2024 05:33 AM

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அடுத்து பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் முக்கியநகரம் காளையார்கோவில். இந்நகரை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயம், சிறு தொழில், வேலைக்காக ஏராளமானவர்கள் இங்கிருந்து சிவகங்கை, பரமக்குடி, காரைக்குடி, தேவகோட்டை, தொண்டி போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.
கிராம ஊராட்சி அந்தஸ்தில் இருந்தாலும், இங்கு அதிகம் பேர் வீடு கட்டி குடியேறி வருகின்றனர். இதனால், காளையார்கோவில் நகரில் மதுரை - தொண்டி ரோடு, காரைக்குடி - பரமக்குடி ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகின்றன.
தொண்டியில் இருந்து காளையார்கோவில் வழியாக மதுரைக்கும், காரைக்குடியில் இருந்து காளையார்கோவில் வழியாக பரமக்குடிக்கும் 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது. இதனால், காளையார்கோவில் அதிக வாகன போக்குவரத்து உள்ள பகுதியாக மாறியுள்ளது.
வாகன நெருக்கடிக்கு ஏற்ப இந்நகரில் உள்ள ரோடுகள் தரமாகவோ, வாகனங்கள் செல்லும் வகையில் விசாலமாக இல்லை. காளையார்கோவிலுக்குள் வாகனங்கள் வந்து செல்வதற்குள் 'இடியாப்ப சிக்கலில்' இருந்து மீண்டு செல்வது போன்ற உணர்வு டிரைவர்களுக்கு ஏற்படும்.
ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு
இதற்கு முக்கிய காரணம்ரோட்டில் பயணிகள் நடக்க இடமின்றி கடைகள் வைத்து ஆக்கிரமிக்கவும், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வோர்களை அதிகாரிகள் வரவேற்பது தான் முக்கிய காரணம். காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட், மதுரை-தொண்டி ரோடு, காரைக்குடி-பரமக்குடி ரோடு, தொண்டி ரோட்டில்ஊராட்சி ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இரு புறமும் கடைகளை விரித்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்து வருகின்றனர்.
இந்த ரோட்டில் அடிக்கடி வாகன விபத்தும் நேரிடுகின்றன. பஸ்ஸ்டாண்ட்டிற்குள்கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளதால், பஸ்கள்உள்ளே சென்று திரும்ப முடியாமல் மதுரை ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர்.
ஆக்கிரமிப்பு கடைக்கு வசூல்
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டிய ஊராட்சி நிர்வாகம், அக்கடைக்காரர்களிடம் தினமும் வரியாக ரூ.30 வீதம் வசூலித்து வருகின்றனர். இந்நகரில் ஏற்படும் நெரிசலை குறைக்க ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.
இதற்கு ஊராட்சி நிர்வாகம், வருவாய், தேசிய நெடுஞ்சாலை, போலீஸ் துறையினர் ஒன்றிணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.