/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரி வசூல் பணியில் ஒப்பந்த பணியாளர்கள்
/
வரி வசூல் பணியில் ஒப்பந்த பணியாளர்கள்
ADDED : மார் 14, 2024 03:51 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் வரிவசூல் பணியில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் நகராட்சி பணியாளர்களா அல்லது வேறு நபர்களா என்ற குழப்பம்ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் இணைப்பு வரி கடைகளுக்கான வாடகை உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சிக்கு சொந்தமாக 113 கடைகள்உள்ளன. நகரில் 17 ஆயிரத்து 997 வீடுகள் உள்ளது. அதேபோல் 6 ஆயிரத்து 862 குடிநீர் இணைப்பு உள்ளது. இவற்றிற்கு வரி பாக்கியாக 4 கோடியே 72 லட்சம் இருந்தது. நேற்று வரை 3 கோடியே 35 லட்சம் நகராட்சி ஊழியர்களால் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் வருவாய் உதவியாளர்கள் 5 பேர் இருக்க வேண்டும்.ஆனால் 3 பேர் தான் உள்ளனர். இவர்களை வைத்து அனைத்து பகுதிக்கும் சென்று வரி வசூலில் ஈடுபட முடியாது என்பதால் ஒப்பந்த பணியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்துகின்றனர்.
நகராட்சியில் குப்பைகளை பிரித்து எடுக்க 110 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். இவர்களை அவ்வப்போது நகரில் வரி கட்டாதவர்கள் வீடுகளுக்கு தகவல் கொடுக்கவும் வரி வசூல் செய்யவும் நகராட்சி அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
அடையாள அட்டை இல்லாமல் குழுவாக செல்லும் போது அங்கு வசிப்பவர்கள் வாடகை வீடு எது சொந்த வீடு எது என்று தெரியாமல் வாடகைக்கு இருப்பவரிடம் தகவல் கூறுகிறார்கள். இதனால் நகராட்சிக்கு எந்த பயனும் இல்லை.
நகராட்சி கணக்கில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளோடு மக்களின் அலைபேசி எண் இணைக்கப்பட்டு இருக்கும். அதனை பயன்படுத்தி நகராட்சியில் இருந்தபடியே வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பேசலாம். பல முறை தகவல் கொடுத்தும் கட்டாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒப்பந்த பணியாளர்களை இதில் ஈடுபடுத்துவதால் இவர்கள் நகராட்சி ஊழியர்கள் தானா என்று மக்கள் சந்தேகம் அடைகின்றனர்.
நகராட்சி ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலையில் நகராட்சி தவிக்கும் நிலையில் இவர்களை பணிக்கு அமர்த்துவதால் மேலும் நிதிச்சுமை அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

