/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒலி பெருக்கிகள் மீது கட்டுப்பாடுகள் அவசியம்
/
ஒலி பெருக்கிகள் மீது கட்டுப்பாடுகள் அவசியம்
ADDED : மார் 04, 2024 05:23 AM
தமிழகம் முழுவதும் பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., தேர்வுகள் நடந்து வருகின்றன. வெகு விரைவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்க உள்ளது. இந்நிலையில் கிராமப்புறங்களில் மாசி, பங்குனி மாதங்களில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெறும்.
கோயில்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதுடன் தெருக்களிலும் விரதம் இருப்பவர்கள் பக்தி பாடல்களை ஒலிபரப்புவது வழக்கம். இது தவிர தற்போது நடமாடும் கடைகள் அதிகளவில் நடைமுறையில் உள்ளன.
மினரல் வாட்டர் தொடங்கி, மீன், காய்கறிகள், பழங்கள், இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் என பலரும் வாகனங்களில் சிறிய வடிவிலான குழாய்கள்மூலம் வாடிக்கையாளர்களை கவர பாடல்கள் ஒலிபரப்புவதுடன் விளம்பரமும் செய்து வீதி வீதியாக வலம் வருகின்றனர்.
இதனால் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. திருப்புவனத்தில் இன்று (மார்ச் 4) இரவு மாரியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் விழா நடந்து முடிந்த பின் புஷ்பவனேஷ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா மார்ச் 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதே போல மற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக விழாக்கள் நடை பெற உள்ளது.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது, பள்ளி அருகிலும் ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர்.
எனவே பொதுத்தேர்வு நிறைவடையும் வரை ஒலிபெருக்கிகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தி வியாபாரம் செய்யவும் தடை விதிக்க வேண்டும, என்றனர்.

