/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரத்தில் மோதி லாரி உரிமையாளர் பலி ரோந்து போலீஸ் விரட்டியதாக சர்ச்சை
/
மரத்தில் மோதி லாரி உரிமையாளர் பலி ரோந்து போலீஸ் விரட்டியதாக சர்ச்சை
மரத்தில் மோதி லாரி உரிமையாளர் பலி ரோந்து போலீஸ் விரட்டியதாக சர்ச்சை
மரத்தில் மோதி லாரி உரிமையாளர் பலி ரோந்து போலீஸ் விரட்டியதாக சர்ச்சை
ADDED : ஆக 22, 2025 12:53 AM

சிவகங்கை,:சிவகங்கை அருகே நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் விரட்டியதால் டூவீலரில் சென்ற லாரி உரிமையாளர் மரத்தில் மோதி இறந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே அகரத்தைச் சேர்ந்தவர் தினகரன் 36. இவர் டிப்பர் லாரி வைத்துள்ளார். நேற்று காலை 9:40 மணிக்கு சிவகங்கை மாவட்டம் காயங்குளம் அருகே டூவீலரில் சென்ற போது மரத்தில் மோதிய நிலையில் இறந்து கிடந்தார்.
அப்பகுதியினர் மானாமதுரை சிப்காட் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தினகரனுக்கு சொந்தமான இரு டிப்பர் லாரிகள் புதுக்கோட்டைக்கு கிரஷர் மண் ஏற்றி சென்ற போது அதில் ஒன்று பழுதாகி சுந்தரநடப்பு அருகே நின்றது.
அப்பகுதியில் ரோந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரி டிரைவர்கள் கவிக்குமார், ஹரியிடம் விசாரித்தனர். அவர்கள் உரிமையாளர் தினகரனிடம் அலைபேசியில் தெரிவித்தனர். தினகரன் சம்பவ இடத்திற்கு டூவீலரில் சென்ற போது போலீசார் அவரிடமும் விசாரித்தனர். பின் டிப்பர் லாரி டிரைவர்கள் லாரியை எடுத்துக்கொண்டு புதுக்கோட்டைக்கு புறப்பட்டனர். தினகரன் டூவீலரில் புறப்பட்டார்.
தினகரனை மீண்டும் ரோந்து போலீசார் விரட்டுவதாக அலைபேசியில் டிப்பர் லாரி டிரைவர் களிடம் கான்பரன்ஸ் காலில் பேசியதாகவும், அதனால் தான் அவர் காயங்குளம் அருகே மரத்தில் மோதி இறந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவர் இறப்புக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காரணம், அவரை விரட்டிய ரோந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிவகங்கை மானாமதுரை ரோட்டில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் சிவராமன், டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் அவர்களுடன் பேசினர். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., உறுதி அளித்தார். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
டி.எஸ்.பி., அமலஅட்வின் கூறுகையில், ''ரோந்து போலீசார் தினகரனை விரட்டவில்லை. அவர் ஏன் அப்பகுதிக்கு சென்றார். எப்படி விபத்தாகி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.