/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே ரூ.28 கோடியில் கான்கிரீட் கால்வாயாக மாற்றம்
/
சிவகங்கை அருகே ரூ.28 கோடியில் கான்கிரீட் கால்வாயாக மாற்றம்
சிவகங்கை அருகே ரூ.28 கோடியில் கான்கிரீட் கால்வாயாக மாற்றம்
சிவகங்கை அருகே ரூ.28 கோடியில் கான்கிரீட் கால்வாயாக மாற்றம்
ADDED : ஆக 14, 2025 02:32 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே கள்ளராதினிபட்டி முதல் சாலுார் வரையிலான 8 கி.மீ., துார ஷீல்டு மண் கால்வாய் ரூ.28 கோடி செலவில், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மேலுார் வழியாக சிவகங்கை மாவட்டத்தில் லெசீஸ், ஷீல்டு, 48 ம் கால்வாய், கட்டாணிபட்டி 1, 2 கால்வாய்கள் மூலம் ஒரு போக சாகுபடிக்கு பயன்படுகிறது. கள்ளராதினிபட்டியில் திறக்கப்படும் பெரியாறு பாசன தண்ணீரால் கள்ளராதினிபட்டி, திருமலை, நாமனுார், மேலப்பூங்குடி, சாலுார், நாலுகோட்டை, சோழபுரம் ஆகிய 7 கிராமங்களில் உள்ள 1,748 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும்.
ஷீல்டு கால்வாயில் கள்ளராதினிபட்டி முதல் திருமலை, மேலப்பூங்குடி, சாலுார் வரையிலான 8 கி.மீ., துாரத்திற்கு மண் கால்வாயாக இருப்பதால், பெரியாறு தண்ணீர் திறந்துவிடும் போது, உரிய நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் மண்ணில் இறங்கி விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மண் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக கட்டித்தர வேண்டும் என கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கோரிக்கை வைத்தனர். அப்போதைய அரசு இத்திட்டத்திற்கு ரூ.21 கோடி அறிவித்தது.
இந்நிலையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ஷீல்டு கால்வாயை கான்கிரீட் கால்வாயாக கட்டித்தர, கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால், இத்திட்டத்திற்கு அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம் கள்ளராதினிபட்டியில் இருந்து திருமலை, மேலபூங்குடி வழியாக சாலுார் வரையிலான 8 கி.மீ., துாரத்திற்கு ஷீல்டு கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கான்கிரீட் கால்வாய் கட்டப்படும் பட்சத்தில், பெரியாறு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி ஷீல்டு கால்வாயில் சென்று 7 கிராமங்களை சேர்ந்த 1,748 ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணிகளை மேலுார் பெரியாறு பாசன திட்ட (நீர்வளம்) செயற்பொறியாளர் சிவபிரபாகர் தலைமையில் பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.