/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் சர்ச்சை உத்தரவில் மாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு
/
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் சர்ச்சை உத்தரவில் மாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் சர்ச்சை உத்தரவில் மாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு
சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் சர்ச்சை உத்தரவில் மாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு
ADDED : ஜன 03, 2025 07:42 PM
புதுடில்லி:சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவி தொடர்பான விவகாரத்தில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் உறுதியாக தெரிவித்து விட்டது.
தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு, தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த பின், முதலில் தேவி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, கூடுதல் ஓட்டுகள் எண்ணப்படவில்லை எனக் கூறி, மீண்டும் ஓட்டுகள் எண்ணப்பட்டு, பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கு எதிராக தேவி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அங்கும் தேவியே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட்டது.
'தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட பின், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ எந்த அதிகாரமும் கிடையாது' என கடந்த மாதம், 19ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், பிரியதர்ஷினி சார்பில் மேலும் ஒரு புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் எனக்குத் தான் அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. எனவே, என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, 'இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இனிமேலும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்' என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.