/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பசு மாடுகள் திருட்டு
/
மானாமதுரையில் பசு மாடுகள் திருட்டு
ADDED : செப் 02, 2025 03:31 AM
மானாமதுரை : மானாமதுரை நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் 10க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கடந்த ஒரு வார காலத்தில் திருடு போனதால் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர், பெரும்பாலானோர் காலை மற்றும் மாலை வேளைகளில் பாலை கறந்த உடன் மேய்ச்சலுக்காக நகர் பகுதிகளில் விட்டு விடுகின்றனர்.
ரோட்டின் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் காயமடைந்தும், பலியாகியும் வருகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
மானாமதுரை நகராட்சி ஊழியர்கள் அடிக்கடி மாடுகளை பிடித்து அடைத்தாலும் உரிமையாளர்கள் மாடுகளை உடனடியாக விடுவித்தவுடன் மீண்டும் ரோட்டில் மேய்ச்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்திற்குள் மானாமதுரை நகர் பகுதிகளில் சுற்றி திரிந்த 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளை இரவில் வாகனங்களில் வரும் கும்பல் திருடி சென்றதால் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 4 நாட்களுக்கு முன்பு மறவர் தெரு பகுதியை சேர்ந்த ஒருவரது 2 பசுக்கள் முதலில் திருடு போனது. இதனைத் தொடர்ந்து தினமும் பசு மாடுகள் திருடு போவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது 10க்கும் மேற்பட்ட பசு மாடுகள் திருடுபோய் உள்ளதால் வேதனையில் உள்ளோம்.
போலீசார் உடனடியாக மாடுகளை திருடியவர்களை பிடித்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றனர்.