ADDED : டிச 27, 2024 04:58 AM

மானாமதுரை: மதுரை,ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரையில் கூட்டம், கூட்டமாக கடந்து செல்லும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.
மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை,பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலையாக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த ரோட்டின் வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் ஏராளமாக சுற்றி திரிவதால் ஆங்காங்கே விபத்து ஏற்பட்டு சிலர் பலியாகி வருகின்றனர்.
மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை பிடித்து அடைத்து வைத்தால் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து மாடுகளை மீட்டு செல்வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர். மாடுகளின் உரிமையாளர்கள் எவ்வித பயமும் இன்றி காலையில் பால் கறந்தவுடன் மாடுகளை ரோட்டில் விடுகின்றனர். மாடுகள் மானாமதுரையில் உள்ள அனைத்து ரோடுகளையும் ஆக்கிரமித்து வருவதால் விபத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்றுமுன்தினம் இரவு மதுரை,ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே ஏராளமான மாடுகள் கூட்டம்,கூட்டமாக நான்கு வழிச்சாலையில் சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நான்கு வழி சாலை நிர்வாகத்தினர் ரோட்டில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

