/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ரோட்டில் திரியும் மாடுகள்
/
மானாமதுரையில் ரோட்டில் திரியும் மாடுகள்
ADDED : மே 22, 2025 12:18 AM

மானாமதுரை: மானாமதுரையில் ரோட்டில் திரியும் மாடுகளால் தினமும் ஏற்படும் விபத்துக்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.அவற்றை பிடித்து அடைக்க போதிய இடமில்லாமல் நகராட்சி நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட சிவகங்கை, தாயமங்கலம், பரமக்குடி, வாரச்சந்தை ரோடுகள் மற்றும் அண்ணாதுரை சிலை, காந்தி சிலை, தேவர் சிலை, மெயின் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் எங்கு பார்த்தாலும் மாடுகள் கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றன. தினமும் ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து கோசாலைகளில் அடைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் சில நேரங்களில் மாடுகளை பிடித்து அடைத்து வைத்தாலும் அப்பகுதி அரசியல் கட்சியினர் மற்றும் கவுன்சிலர்கள் சிபாரிசு செய்து மாடுகளை விடுவித்து வருகின்றனர்.
மேலும் போதிய இடமில்லாமலும், பராமரிக்க முடியாத நிலை உள்ளதால் பிடிக்க நகராட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் நிரந்தரமாக அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.