/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூடுதல் கார்டு கடைகளை பிரிக்காததால் நெருக்கடி
/
கூடுதல் கார்டு கடைகளை பிரிக்காததால் நெருக்கடி
ADDED : டிச 20, 2024 02:49 AM
சிவகங்கை: மாவட்டத்தில் 2000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிக்காமல் வைத்துள்ளதால், அக்கடைகளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் காலங்களில் விற்பனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் கூட்டுறவு, மொத்த விற்பனை பண்டக சாலை,நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகத்தின் கீழ் 829 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளில் 4.20 லட்சம் குடும்பத்தினர் தங்களது கார்டுகளின் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் வாங்கி பயனடைகின்றனர்.இங்கு குறைந்தது 500 கார்டுகளில் இருந்து அதிகபட்சம் 2000 கார்டுக்கு ஒரு கடை வீதம் இயங்குகிறது.தற்போது 550 விற்பனையாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அதே நேரம் 279 கடைக்கு விற்பனையாளர் இல்லை. இதனால் முழு, பகுதி நேர கடைகளாக பிரித்து விற்பனையாளர்களுக்கு கூடுதல் கடைகளை ஒதுக்கி, அவர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கின்றனர். ஏற்கனவே கடைகளில் விற்பனையாளர் பற்றாக்குறை இருக்கையில், பல விற்பனையாளரை மாற்று பணியாக கூட்டுறவுதுறை அலுவலகங்களில் நியமித்துள்ளனர். இதனால் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
கடைகளை பிரிப்பது அவசியம்
கடந்த சில மாதத்திற்கு முன் கூட்டுறவு துறை நிர்வாகம் 2000 கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்க உத்தரவிட்டது. இங்கு 30 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் 2000 கார்டுகளுக்கு மேல் உள்ளது. இக்கடைகளை இரண்டாக பிரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பணிச்சுமையில் விற்பனையாளர்கள் தவிக்கின்றனர்.
எனவே சிவகங்கையில் 2000 கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிப்பதோடு, அக்கடைகளுக்கு புதிதாக விற்பனையாளரை நியமிக்க வேண்டும். மேலும், ஒரே விற்பனையாளர் 3 கடைகள் வரை கூடுதலாக பார்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வழக்கமான பொருட்களை வினியோகிக்க முடியாமல் திணறும் நிலையில், பொங்கல் தொகுப்பு, ரூ.1000 உதவித்தொகை, இலவச வேட்டி சேலை போன்றவற்றை வழங்கும் போது இன்னும் சிரமம் ஏற்படும் என விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை நீடிக்கிறது. எனவே, 2000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து, அக்கடைக்கு புதிதாக விற்பனையாளர் நியமிக்க வேண்டும். அலுவலக பணியில் உள்ள விற்பனையாளர்களையும் அவரவர் கடைகளுக்கு அனுப்ப அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.