ADDED : டிச 09, 2024 05:21 AM

மானாமதுரை: மானாமதுரை கண்மாய்க்கு 20 வருடங்களுக்குப் பிறகு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் நிலையில் மடைகள் மராமத்து செய்யாததினால் கண்மாய் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து வரும் கால்வாய் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.
கண்மாய்க்கு தண்ணீர் வராத காரணத்தினாலும் கண்மாய் பாசன பகுதிகளில் விவசாயம் செய்து வந்த பெரும்பாலான விவசாயிகள் தங்களது வயல்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றுகின்றனர்.
குறைந்த அளவிலான விவசாயிகள் மட்டுமே தற்போது விவசாயம் செய்து வருகிற நிலையில் கடந்த வருடம் மானாமதுரை கண்மாய் பாசன சங்க விவசாயிகளின் வேண்டுகோளை அடுத்து கட்டிக்குளம் மதகணை வலது பிரதான கால்வாயில் இருந்து பிரியும் மானாமதுரை கால்வாயில் தூர்வாரினர்.
இதையடுத்து தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர்.
மானாமதுரை கண்மாய்க்கு தண்ணீர் வரும் நிலையில் கண்மாயில் உள்ள மடைகளை மராமத்து செய்யாமல் விட்டதால் கண்மாய் நிரம்பி உடையும் அச்சம் நிலவுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு செல்லமுத்து நகரில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
இது குறித்து கீழமேல்குடி விவசாயி முத்துராமலிங்கம் கூறியதாவது, மானாமதுரை கண்மாய்க்கு கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் இருந்ததால் மடைகள் மற்றும் கரைகள் பராமரிப்பின்றி போனது.
தற்போது வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் கண்மாய் பகுதியில் ஆங்காங்கே சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் தண்ணீர் அதிக அளவில் வரும் நிலையிலோ அல்லது மானாமதுரை பகுதியில் பலத்த மழை பெய்தாலோ கண்மாய் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.