/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புளியால் ஊரணி சுகாதார சீர்கேட்டால் தொற்று அபாயம் ; சாக்கடை கழிவில் நடக்கும் அவலம் தொடர்கிறது
/
புளியால் ஊரணி சுகாதார சீர்கேட்டால் தொற்று அபாயம் ; சாக்கடை கழிவில் நடக்கும் அவலம் தொடர்கிறது
புளியால் ஊரணி சுகாதார சீர்கேட்டால் தொற்று அபாயம் ; சாக்கடை கழிவில் நடக்கும் அவலம் தொடர்கிறது
புளியால் ஊரணி சுகாதார சீர்கேட்டால் தொற்று அபாயம் ; சாக்கடை கழிவில் நடக்கும் அவலம் தொடர்கிறது
ADDED : அக் 10, 2024 05:30 AM

தேவகோட்டை : புளியாலில் உள்ள ஊரணியை சுத்தம் செய்யாததால் சுகாதார சீர்கேட்டால் தொற்று அபாயம் நிலவுவதாக மக்கள் அச்சப்படுகின்றனர் .
தேவகோட்டை அருகே உள்ள புளியாலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பஸ் ஸ்டாண்டை ஒட்டி பழனியப்பச் செட்டியார் ஊரணி என்ற பழமையான ஊரணி உள்ளது. பல ஆண்டுகளாக இந்த ஊரணி வற்றவில்லை என கிராமத்தினர் கூறுகின்றனர்.
முன்பு இந்த ஊரணி தண்ணீரை மக்கள் நல்ல தண்ணீராக பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இன்று இந்த ஊரணி சுகாதாரமற்ற நிலையில் தலைகீழாக மாறி உள்ளது. இந்த ஊரணியின் கரையோரம் குப்பை கொட்டுவதோடு கோழிக்கழிவு, திருமண மண்டப கழிவு, மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றனர்.
இந்த ஊரணி நீரே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. மழை காலத்தில் இந்த ரோட்டில் கால் வைக்க முடியாது. வேறு வழியின்றி செல்ல வேண்டிய நிலை. ஊரணியின் மறுபுறம் வசிக்கும் குடும்பத்தினர், ஊரணி கரை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
குப்பை கழிவுகளில் மிதித்து தான் வர வேண்டும். மழை நேரங்களில் பள்ளிக் குழந்தைகள் இந்த பகுதியில் குப்பை கழிவு மிதக்கும் தண்ணீரில் நடந்து தான் செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இது தொடர்பாக கிராமத்தினர் அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் செவி சாய்க்கவில்லை. புளியால் கிராம சபை கூட்டத்தில் கூட மக்கள் காரசாரமாக பேசினர். புளியாலில் பல வீதிகளில் நடு ரோட்டில் சாக்கடை செல்வதும், இந்த ஊரணியை சுற்றி சுகாதார சீர் கேட்டில் நோய் பரவும் நிலை இருப்பதும் பல ஆண்டுகளாக மக்களின் சாபக்கேடாக உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.
மாவட்ட அதிகாரிகள் புளியால் பகுதியில் பார்வையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

