UPDATED : நவ 13, 2026 06:02 AM
ADDED : நவ 12, 2026 11:28 PM

l கால்நடைக்கு சிகிச்சை அளிக்கும் நபர்களால்
l பயிற்சி டாக்டர்களிடம் ஆலோசனை பெறலாம்
காரைக்குடி: காரைக்குடி வட்டாரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி நபர்களால் கால்நடைகளுக்கு மட்டுமின்றி பால், இறைச்சி உண்ணும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
காரைக்குடி கோட்டத்தில் காரைக்குடி, சூரக்குடி, கோட்டையூர், புதுவயல், கண்டனூர், அரியக்குடி, பீர்க்கலைக்காடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகள், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள், 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிகள் உள்ளன.
காரைக்குடி பகுதியில் கால்நடை மருத்துவர்கள் என்ற பெயரில் போலியான சிலர் கால்நடை களுக்கு சிகிச்சை அளிப்பதால், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதோடு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற போலி நபர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; கால்நடைத்துறை சார்பில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற சிலர் மருத்துவர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தவறான சிகிச்சையால் கால்நடைகள் உயிரிழந்து வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு தவறான ஆண்டிபயாட்டிக் மருந்து செலுத்துவதால், பால், இறைச்சி உண்ணும் மனிதர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும். பல மாவட்டங்களில் போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் இழப்பீடு மற்றும் இன்சூரன்ஸ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மருத்துவர் அல்லாதவர்கள் கால்நடைகளுக்கு ஊசி போடுவதை சோசியல் மீடியாவில் வீடியோவாகவும் பகிர்ந்து வருகின்றனர். இதனை கால்நடைத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில்; கால்நடைகளை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு சினை ஊசி போடுவதற்கு பயிற்சி அளிக்கிறது. கால்நடைகளுக்கு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடைத்துறை சார்பில் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் உட்பட பல்வேறு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சி பெற்றவர்கள், போலியாக கால்நடை மருத்துவர் என்று கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பது தவறானது. கால்நடை வளர்ப்போர் சிகிச்சை பெறுவதும் தவறானது. இவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய், சிகிச்சை முறை குறித்தும் மருந்துகள் குறித்தும் எந்த பயிற்சி வழங்கப்படுவதில்லை. புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை வளர்ப்போருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
