/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ஆபத்தான பொழுதுபோக்கு அம்சங்கள்
/
திருப்புவனத்தில் ஆபத்தான பொழுதுபோக்கு அம்சங்கள்
ADDED : மார் 25, 2025 05:19 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோயில் எதிரே ஆபத்தான முறையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுஉள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனிதிருவிழா மார்ச் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 28ம்தேதி பொங்கல்திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோயிலுக்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினசரி வந்து செல்வது வழக்கம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்த பின் கோயில் எதிரே உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் ஏறி மகிழ்வது வழக்கம்.
இவர்களுக்காக ராட்சத பலூன், ஜெயண்ட் வீல், டோரா டோரா, மினி ரயில், குழந்தைகளுக்கான போட், ராட்டினம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும். ஜெயண்ட் வீல் உள்ளிட்டவைகள் அமைக்க பொதுப்பணி, தீயணைப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் சான்று பெற வேண்டும்.
மேலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட தீயணைப்பு வீரர்கள் தயாராக வேண்டும். ராட்டினம் அமைப்பவர்களும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால் திருப்புவனத்தில் அமைத்துள்ள, பொழுதுபோக்கு அம்சங்களில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லை.
பொதுமக்கள் வந்து செல்ல போதிய பாதை வசதி இல்லை. ஜெனரேட்டர் மூலம் ராட்டினம் உள்ளிட்டவைகள் இயக்கப்படுகின்றன. அவற்றிற்கான மின்கேபிள்கள் தரையில் கிடக்கின்றன. இணைப்புகளில் போதிய பாதுகாப்புகள் இல்லை. திடீரென மழை பெய்தால் மின்கசிவு ஏற்பட வாய்ப்புண்டு.
பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படும் போது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். ஆனால் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.