/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு
/
ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜன 18, 2024 06:01 AM

தேவகோட்டை : தேவகோட்டையில் சேகரமாகும் குப்பையை கொட்ட இடம் ஒதுக்கும் பிரச்னைக்கு அதிகாரிகளின் உறுதியான நடவடிக்கை இல்லாததால் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தேவகோட்டையில் சேரும் குப்பைகளை மணிமுத்தாறு கரையோரம் பல ஆண்டுகளாக கொட்டி வந்தனர். இப்பகுதி சித்தானுார் ஊராட்சி பகுதி என்பதால் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பை பிரச்னை உருவெடுத்தது.
அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினிடம்பேசியதால் தேவகோட்டை ரஸ்தா அருகே காரைக்குடியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் அருகிலேயே இடம் ஒதுக்கி கொடுத்தனர்.
'தேவகோட்டை நகராட்சி' சார்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 15 ஆண்டுகளாக குப்பை கொட்டினர். இந்த இடத்திற்கு முறைப்படி தேவகோட்டை நகராட்சியினர் பட்டாவும் வாங்கி விட்டனர்.
இந்நிலையில் கடந்தஆண்டு குப்பை கொட்டும்வாகனங்கள் செல்லும் பாதையை அடைத்த காரைக்குடி நகராட்சியினர் வேறு பாதையில் செல்லுமாறு கூறினர்.
மீண்டும் குப்பை பிரச்னை பெரிய அளவில்உருவெடுத்ததால் தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் வேறு இடம் தருவதாக கூறி பிரச்னையை சமாளித்தனர்.
தேவகோட்டை சருகணி ரோடு திருப்பத்தில் ஆற்றின் கால்வாயை ஒட்டி இடத்தை தேர்வு செய்து குப்பைகளை கொட்டும்படி கூறினர். நகராட்சியினரும் குப்பைகளை கொட்டி வந்தனர்.
அருகில் உள்ள கிராமத்தினர் விவசாயம் பாதிப்பதாக ஐகோர்ட் மூலமாக இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை உத்தரவு பெற்று விட்டனர்.
தற்போது தேவகோட்டை நகரே குப்பை நகரமாக மாறி அனைத்து பகுதியிலும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் கூறுகையில், குப்பை பிரச்னை தொடர்கதையாக இருந்து வருகிறது. ரஸ்தாவில் தேவகோட்டை நகருக்குகுப்பை கொட்ட அரசு அனுமதி வழங்கிய இடத்திற்கு பட்டா வாங்கி விட்டோம்.
சம்பந்தப்பட்ட இடத்தில் குப்பை கொட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் இடத்திற்கு செல்ல வழி வேண்டும். பொங்கலுக்கு மலை போல் குப்பை குவிந்து விட்டது.
மக்களின் நலம் கருதி வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தை அனைத்து கட்சி கவுன்சிலர்கள், கட்சியினர், வியாபாரிகள் முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.