ADDED : ஆக 14, 2025 02:36 AM
கீழடி: கீழடி விலக்கில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. புளியங்குளம், மணலுார், லாடனேந்தல் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் கீழடி விலக்கு அருகே அடிக்கடி விபத்து நேரிட்டு வருவதால் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
2023, செப்டம்பரில் கீழடி விலக்கில் கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய போலீஸ் சோதனைச்சாவடியை ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,யாக இருந்த துரை திறந்து வைத்தார். நான்கு வழிச்சாலையை கடக்கும் வாகனங்கள், கீழடி விலக்கில் திரும்பும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனைச்சாவடியில் இருந்தவாறே கண்காணிக்க முடியும், சோதனைச்சாவடியில் போலீசார் ஓய்வு எடுக்கவும் அறை அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு சோதனைச்சாவடி இடையூறாக இருப்பதால் இடித்து அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலையில் சிலைமான் அருகே அமைக்கப்பட உள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புத்தம் புதிய கட்டடம் இரண்டே வருடங்களில் இடிக்கப்படுவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.