/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வெற்றிலை விளைச்சல் சரிவு! வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு
/
திருப்புவனத்தில் வெற்றிலை விளைச்சல் சரிவு! வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு
திருப்புவனத்தில் வெற்றிலை விளைச்சல் சரிவு! வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு
திருப்புவனத்தில் வெற்றிலை விளைச்சல் சரிவு! வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு
ADDED : மே 06, 2024 12:12 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கடும் கோடை வெயில் காரணமாக வெற்றிலை செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். வெற்றிலை விளைச்சல் சரிவால் விலையும் அதிகரித்துள்ளன.
தென்மாவட்டங்களில் திருப்புவனம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு வெற்றிலை பயிரிடப்படுகிறது. திருப்புவனத்தில் சிறுகாமணி, கற்பூரம் ரகம் அதிகளவு பயிரிடப்படுகிறது. திருப்புவனம், புதூர், பழையூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, கலியாந்தூர் வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். நெல் பயிரிட்ட விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஐந்து முதல் 15 விவசாயிகள் வரை இணைந்து கூட்டாக இவற்றை பயிரிடுகின்றனர்.
இதை பயிரிட்டு ஆறு மாதத்திற்கு பிறகுதான் அறுவடை தொடங்கும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை நடக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை கிள்ளப்படும் ஏக்கருக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் கிலோ அறுவடை செய்யலாம். கிலோ ரூ.140 முதல் 160 வரை விற்ற வெற்றிலை இன்றைக்கு கிலோ ரூ.200 ஆக உயர்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெற்றிலை செடிகள் வாடி வதங்குகின்றன. தண்ணீர் பாய்ச்சினாலும் வெயிலின் தாக்கத்தை செடிகள் தாங்க முடியவில்லை. 10 கிலோ வெற்றிலை கிள்ளும் இடத்தில் ஒரு கிலோ, அரைகிலோ அளவே கிடைக்கிறது.
விளைச்சல் அதிகரித்து விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. இனி வரும் காலங்களில் முகூர்த்த நாட்களும் வருவதால் விலை ரூ.250 விற்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து விவசாயி போஸ் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரை செலவிடுகிறோம். மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே களிமண் தரை என்பதால் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கோடை காலமாக இருப்பதால், தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. வெயிலால் வெற்றிலை கொடிகள் கருகி, விளைச்சல் இல்லாமல் போகிறது. இங்கிருந்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ராமநாதபுரம், பரமக்குடி, மதுரைக்கு தினமும் அனுப்பி வைக்கிறோம். விளைச்சல் குறைவால், விற்பனைக்கு குறைவாகவே அனுப்புகிறோம்.
//