ADDED : நவ 22, 2026 04:57 PM
மானாமதுரை: ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்திற்கு சென்ற போர்ட் மெயிலில் மானாமதுரை அருகே மான் மோதியதில் இரண்டரை மணி நேரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக தாம்பரம் வரை செல்லும் போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (நவ.,21) மாலை ராமேஸ்வரத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு கிளம்பி மானாமதுரைக்கு 7:45 மணிக்கு வந்து 7:50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.
சிவகங்கை சென்று கொண்டிருந்தபோது மேலக்கொன்னக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் இன்ஜின் மீது மான் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் இன்ஜினில் நடுவில் உள்ள பிரேக் பகுதியில் பழுதடைந்ததால் அங்கேயே 2:30 மணி நேரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயிலில் மோதிய நிலையிலும் மான் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து அங்கிருந்து ஓடி சென்றது. காரைக்குடியில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டுவரப்பட்டு தாம்பரத்திற்கு 2:30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
