திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் உள்ளது, பங்குனி, சித்திரை மாதங்களில் விழாக்கள் களை கட்டும்.
இம்மாதங்களில் தினசரி அம்மனும் சுவாமியும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம், கடந்த சில ஆண்டுகளாக ரத வீதிகளில் பலரும் தெருக்களை ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர். பொது இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதால் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.
தெருக்களில் ஏற்கனவே சாக்கடை வடிகால் கட்டுவதற்கும் குடிநீர் குழாய் பதிப்பதற்கும் தெருக்களில் கட்டுமான பணிகள் செய்துள்ளதால் தெருக்கள் சுருங்கி விட்டன. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வித வாகனமும் செல்ல முடியவில்லை.பல முறை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
பொதுமக்கள் கூறுகையில்: பெருமாள் கோயில் வீதியில் பொது இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியதால் சுவாமி வீதியுலா செல்ல முடியாமல் உள்ளது.
தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் முறைகேடாக வாங்கி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதுடன் மின்வாரிய அதிகாரிகளை சரிகட்டி முக்கிய சந்திப்பு இணைக்கும் பாதையில் புதிய மின் கம்பத்தை நட்டு வைத்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியில் நிறுத்ததப்பட்டன.
எனவே பேரூராட்சி, வருவாய்த்துறை, காவல் துறை இணைந்து தெருக்களை அளவீடு செய்து பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

