/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தடுப்புகளை தாண்டி வைகையில் குளிக்கும் பக்தர்கள்
/
தடுப்புகளை தாண்டி வைகையில் குளிக்கும் பக்தர்கள்
ADDED : அக் 26, 2025 06:25 AM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக வைகை அணை நிரம்பி அக்.19ம் தேதி முதல் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கும் இடங்களில் தடுப்பு வைத்து எச்சரிக்கை பேனரும் வைக்கப்பட்டது.
திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்கள் எச்சரிக்கையை மீறி வைகை ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். வைகை ஆற்றில் தண்ணீர் திறந்த நிலையில் மழை நீரும் சேர்ந்து அதிகளவில் நீரோட்டம் காணப்படுகிறது.
ஆபத்தை உணராமல் வெளியூர் பக்தர்கள் ஆற்றில் இறங்குவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வெளியூர் பக்தர்கள் ஆற்றில் இறங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

