UPDATED : அக் 11, 2026 12:58 AM
ADDED : அக் 10, 2026 03:24 PM

திருப்புவனம்: புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க வந்திருந்த ஹிந்துக்கள் தண்ணீரின்றி வறண்ட வைகை ஆற்றை கண்டு ஏமாற்றமடைந்தனர்.
புண்ணிய நகரான திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி ஹிந்துக்கள் வழிபடுவது வழக்கம். அமாவாசை தினங்களில் அவர்களை வழிபட்டால் அவர்களுடைய ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேற்று மஹாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வைகை ஆற்றினுள் தற்காலிக கொட்டகை அமைத்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். வைகை ஆற்றில் தண்ணீரே இன்றி வறண்டு கிடந்ததால் பக்தர்கள் ஆங்காங்கே குழி தோண்டி பொருட்களை கரைத்தனர். இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் தலைமையில் போலீசார் நான்கு ரத வீதிகளிலும் தடுப்பு ஏற்படுத்தி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
